கோரோனாத் தொற்று சமூக மட்டத்தில் பரவும்போது கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்தினர் நோய் அறிகுறியற்றவர்களாகக் காணப்படுவர். ஒருவரின் உடலில் நோய்க்கிருமித் தொற்று இருப்பின் மூன்று வாரம் வரை ஏனையவர்களுக்குத் தொற்ற வாய்ப்பு உள்ளது.
கோரோனாத் தொற்றுத் தொடர்பாக நோய் அறிகுறி, தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
சமூகத்தில் எழுந்தமானமாக யாரிடமும் பரிசோதனை மேற்கொள்ள முன் அந்நபரிடமிருந்து எழத்துமூல அனுமதி பெறப்படல் வேண்டும். மேலும் கோரோனா ஆய்வுகூட முடிவுகள் கூறுவதற்குமுன் தனிமனித ஆற்றுப்படுத்தலும் குடும்ப ஆற்றுப்படுத்தலும் வழங்கப்படல் வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில் கோரோனா கட்டுப்பாட்டில் மனித உரிமை அணுகுமுறையினைக் கடைப்பிடிக்க முன்னுரிமை அளிக்கும். நோயாளி தொடர்பான தகவல்களை விளம்பரப்படுத்தல் தவறானது. மாறாக இராணுவ எதேச்சாதிகார ரீதியிலான கோரோனாக் கட்டுப்பாடு வெறும் புள்ளிவிவரங்களுடன் மட்டும் நிற்கும்.
எனவே நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே கோரோனாத் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
இன்று இலங்கையில் சுமார் 33 ஆயிரம் பேர் கோரோனாத் தொற்றுடைய நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனவே சுமார் 9 ஆயிரத்து 600 பேர் கோரோனாத் தொற்றுடன் அறிகுறி இல்லாது சமூகத்தில் காணப்படலாம்.
ஆற்றுநீரின் வெள்ளத்தினை அளவிடுவது போன்றே கோரோனா தொற்றின் அளவினைக் கண்டறியும் பரிசோதனை முடிவுகள் ஆறு பெருக்கெடுத்து ஓடும்போது அதன் வெள்ளத்தை அளவிடுவது மடமையாகும். மாறாக வெள்ளத்தை தடுத்தல், வெள்ளப் பாதிப்பைக் குறைத்தல் என்பனவே செய்தல் அவசியமாகும்.
அதேபோல் தற்போதைய சூழலிலும் கோரோனா நோயாளிகள் அடையாளப்படுவதனை எண்ணிக்கையில் மட்டும் கருத்தில் கொள்ளாது, கோரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கும் செய்ய வேண்டிய முற்காப்புக்களை ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகச் செய்ய வேண்டும்.
கோரோனா நோய்கான பிரத்தியேகச் சிகிச்சை இல்லாத சூழலில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி கோரோனா நோய் பரிசோதனைக்கு உட்படுத்தல் மனித உரிமைரீதியில் சரியானதல்ல. அதேபோல் இறந்த ஒருவரின் உடலில் கோரோனா நோய்கிருமியின் தொற்றும் தன்மையைவிட நோய் அறிகுறி காட்டாது.
கோரோனா வைரஸ் தொற்றுடைய நபர், சமூகத்தில் கோவிட் -19 நோயினைப் பரப்புவர். எனவே இறந்த கோரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடலை புதைத்தல், உயிருள்ள கோரோனா தொற்று நோயாளரை நடமாடலைவிட ஆபத்தானதல்ல. அதாவது இறந்த உடல்களை புதைத்தல் கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் இல்லாதபோது சமூகத்தில் நடமாடுதலைவிட ஆபத்தானதல்ல.
கோரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாட்டில் மனித உரிமை அணுகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும். தனிமனித உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும். சிறுபான்மையினர், மதரீதியாகத் துன்புறுத்தப்படல் தவிர்க்கப்படல் வேண்டும்.
இன, மத, பிரதேரீதியாக நோயாளர்களை வதைப்படுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும். உலக சுகாதார நிறுவன ஆலோசனைகளையே பின்பற்றுதல் வேண்டும். காசநோய்க் கட்டுப்பாட்டிற்கான சமூக அணுகல் கோரோனா வைரஸ் நோய்க் கட்டுப்பாட்டிலும் பயன்படும். காசநோய் ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட கோரோனா வைரஸ் தொற்று ஒருவரில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு.
அதிகாரிகள் கோரோனா பரவலைச் சாதகமாக வைத்து மக்களின் சமூக விழுமியங்களை மிதிக்க முற்படுவதும் மக்களை அடக்க முயல்வதும் தவறானது.
மருத்துவர் சி. யமுனாநந்தா