சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்: சீ.வீ.கே

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது போன்று சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 61வது ஆண்டு விழாவில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. எனினும் எமது பிரதேசத்தின் ஒரு பகுதி இளைஞர்கள் வழிதவறி போவது மிகவும் கவலை தரும் விடயமாக இருக்கின்றது.

குறிப்பாக மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனைகள் எமது சமூகத்துக்குள் உள்வாங்கப்பட்ட காரணத்தினால் சில இளைஞர்கள் வழிதவறிப் போகின்றார்கள் இதனால் சமூகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

சனமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக ஒற்றுமையாக செயல்படுகின்றீர்கள் இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு நீங்கள் கூட்டாக இணைந்து கைதடியை போதைப்பொருள்,மதுப்பாவனை இல்லாத கிராமமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் முன்மாதிரியாக செயல்படுவதன் மூலம் இதே மாதிரியான நிலைப்பட்டை ஏனைய கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களைச் சேர்ந்த இளைஞர்களும் முன்னெடுப்பார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு கிராமங்களிலும் போதைப்பொருள், மதுப்பாவனைகளை இல்லாமல் செய்வதன் மூலம் சமூக பிறழ்வுப் பாதிப்புகளில் இருந்து நாங்கள் விடுபடலாம். இதற்கு கைதடி இளைஞர்கள் முன்மாதிரியாக செயல்படவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்மாதிரியாக செயல்படுவதன் மூலம் மதுப்பாவனை இல்லாத போதைப்பொருள் இல்லாத சட்டத்தை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்கலாம்” என சீ.வீ.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts