தன்னலம் பேராசைகளிலிருந்து விடுபட்டு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு, தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முழு மனித சமூகமும் ஆன்மீக மற்றும் லெளகீக ரீதியிலான வெற்றியை அடைந்துகொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் தன்னலம் மற்றும் பேராசை என்பவற்றிலிருந்து விடுபட்டு தமது சொத்துகளை ஏனையோருக்கும் வழங்க வேண்டும். சகவாழ்வு சகோதரத்துவத்தை உறுதிசெய்ய சமூகத்தில் உயர்வு, தாழ்வு பேதங்களையும் ஒழித்தல் வேண்டும். அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையிலேயே வருடாந்தம் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
“ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இப்றாஹீம் நபியவர்கள் தனது மகனான இஸ்மாயில் நபியவர்களை இறைவனுக்காக தியாகம் செய்ய முன்வந்தமையை எடுத்தியம்பும் இந்த வணக்கமானது இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமானதொரு வைபவமாகக் கருதப்படுகின்றது.
உலகம் பூராவும் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலக சமாதானத்தின் பொருட்டு மதக் கிரியைகளில் ஈடுபடும் சர்வதேச மாநாடு என்ற ரீதியிலும் ஹஜ்ஜுப் பெருநாளானது உலக மக்கள் அனைவருக்கும் மாபெரும் முன்மாதிரியாக உள்ளது.
மனிதாபிமானம் ஆட்சி செலுத்தும் யுகம் ஒன்றிற்காக இன பேதமின்றி சகலரும் ஐக்கியமாக நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கத்தில் இன்றைய தினம் ‘ஈதுல் அழ்ஹா’ ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சிகரமான பெருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.