எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. சுயநல காரணங்களுக்காக உள்ளூர்வாசிகளும் இவ்வாறான வெளியார் உள்ளீடல்களுக்குத் துணைபோகின்றனர்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபையின் 19.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொக்குவில் சந்தைக் கட்டிடத் தொகுதித் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘சில சபை நிறுவனங்கள் தம்மிடம் இருக்கும் பணத்தைப் பூட்டி வைத்து வட்டியை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆக்கபூர்வமாக மக்கள் பணிகளில் இறங்க வேண்டும் என்ற கரிசனை அவர்களுக்கு இல்லாதிருக்கின்றது. பணமானது புழக்கத்திற்கு வரவேண்டும். முதலீட்டாளர்கள் ஏன் தமது முதலீட்டை முன்வைத்துப் தொழில்களைத் தொடங்குகின்றார்கள். அதற்குக் காரணம் பணவீக்கம் தான்.
பணத்தைப் பணமாகப் பலகாலம் வைத்திருந்தால் அதன் மவுசு குறைந்து விடும். அந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் இன்று என்ன செய்ய முடியுமோ அதன் ஒரு பகுதியைத்தான் காலம் போக எம்மால் அப்பணத்தை வைத்துச் செய்ய முடியும்.
நாளாக நாளாகப் பொருட்கள் விலை கூடும். தொழிலாளர் ஊதியம் கூடும். எனவே எமது பணத்தை வைத்து இன்று எம்மால் செய்யக் கூடியதை சில காலத்தின் பின்னர் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இன்று எம்மால் வாங்கக்கூடியதை அதே பணத்தை வைத்து சில காலத்தின் பின்னர் வாங்க முடியாமல் போய்விடுகிறது.
சிலர் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டியை கூட்டிச்சென்றால் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் அந்தளவுக்கு வட்டி கிடைக்குமா என்பது ஒரு கேள்வி. அப்படித்தான் கிடைத்தாலும் நிரந்தரமாக அந்தக் கூடும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டி கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி.
மேலும் தற்போது எமது கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டி இருக்கின்றது. அத்துடன் மாதாந்தம் வட்டி வந்து எமது பணம் குட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அப்பணம் எமது சூழலுக்கு ஏற்றவாறு புழக்கத்தில் இல்லாது தரித்து நிற்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.
சேமிப்பு வங்கிக் கணக்குகளில் மட்டும் இலக்கங்களாக நிற்கின்றது அப்பணம். எனவே தான் எமது பிரதேச சபைகள் போன்ற நிறுவனங்கள் தமது வருமானங்களை வளமான வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் எமது மக்கள் பெறும் விதத்தில் செலவழிக்க முன்வரவேண்டும்.
இன்று எம்மக்கள் தம்மைத்தாமே வலுவூட்டி வாழ்க்கைத் தரத்தை வளம் பெறச்செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க முன்வரவேண்டும். எல்லா விதமாகவும் எமது இயல்பு வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் தடைசெய்யுமாறான ஒரு சூழ்நிலையே தற்போது விளங்குகின்றது.
இன்றுதான் வட, கிழக்கு மாகாண சபைகளில் எந்தளவுக்கு அரசாங்கம் முட்டுக் கட்டைகளை முன்வைத்து எமது முன்னேற்றத்தைத் தடைப்படுத்தி வந்துள்ளது என்பது பற்றி ஒரு சிங்கள ஊடகவியலாளர் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரையைக் கண்ணுற்றேன்.
அதாவது எமக்கு இன்று நடப்பது போலத்தான் முன்னரும் நடந்து வந்துள்ளது என்பதை அவரின் கட்டுரை ஆராய்ச்சிபூர்வமாக எடுத்துக்காட்டுகின்றது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்வது புலனாகின்றது. எனவேதான் எங்கள் மக்களின் நலனைப் பாதுகாக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியுள்ளது.
யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, இராணுவத்தினால் பலாலியில் பயிரிட்டு, அறுவடை செய்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளை திருநெல்வேலிச் சந்தையில் விற்பனைக்கு விடப்படாது என்று ஆணையிட்டதால் ஓரளவுக்கு எமது மக்களின் மரக்கறி விற்பனைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
அவருக்கு நாம் நன்றி கூறுகின்றோம். ஆனால் இதுவரை காலமும் நடந்து வந்த அந்த இராணுவ மரக்கறி விற்பனை முறைமை எதிர்காலத்தில் மீண்டும் தொடக்கப்படாது என்பதற்கு என்ன நிச்சயம்.
அதனால்த்தான் நான் நேற்றைய மேதினக் கூட்டத்தில் படையினர் வெளியேற வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி