சமுர்த்தி திட்டம் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படவுள்ளது

சமுர்த்தி திட்டம் மிகவும் செயற்திறனான பயனுள்ள அமைப்பாக மாற்றியமைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒழுங்கில்லாத நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்ததால் அது திருப்தியளிக்காத அமைப்பாக மாறியுள்ளது. இதனை நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமுர்த்தி முகாமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூக வலுவூட்டல், நலநோம்புகை அமைச்சர் எஸ் பி திசாநாயக்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts