வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளை, சமுர்த்தி முத்திரை, வீடமைப்பு திட்டம் வழங்குவதாகத் தெரிவித்து பிரதேச செயலகத்துக்கு அழைத்த சிலர் அவர்களிடம் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் நடப்பதாக அறிந்துகொண்ட பிரதேச செயலக நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து அரச அதிபருக்குத் தெரியப்படுத்தி, அவரின் அனுமதியுடன் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
சமுர்த்தி முத்திரை, வெள்ள நிவாரணம், வீடமைப்பு உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தே பிரதேச செயலகத்துக்கு வருமாறு தம்மை சிலர் அழைத்தனர். இதன்படி நாம் கூட்டத்தக்கு சென்றபோது மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரசாரம் நடத்தினர்.
சிறிரெலோ உதயராசா, வவுனியா மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் லலித், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அண்மையில் அரசுடன் இணைந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என பலர் கலந்துகொண்டு தம்மை மஹிந்தவுக்கு வாக்களிக்கக் கோரினர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அங்கிருந்த சிலர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கும் சம்பவம் குறித்துத் தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன் வவுனியா வடக்கு பிரதேச செயலக ஊழியர்களும் பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதுகுறித்து பிரதேச செயலர் வவுனியா அரச அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கூட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுப்படி கூட்டத்தை நிறுத்தச் சென்ற பிரதேச செயலக ஊழியர்களை சிறிரெலோ உறுப்பினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.