Ad Widget

சமாதானம் செய்யவே கடிதம் கோரினேன்

விபத்துக்குள்ளான இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்காகவே தான் கடிதம் கோரியதாக ஊர்காவற்றுறை “பி” பிரிவு ஆதார வைத்தியசாலை வைத்தியர், ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னிலையில் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (08), மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார்.

விபத்தின் போது, சொத்துக்களுக்கும் உயிருக்கும் சேதம் ஏற்படுத்தவில்லையென்பதை உறுதிப்படுத்திய கடிதத்தை தருமாறு அங்கு கடமையாற்றும் வைத்தியர் காயமடைந்தவரிடம் கோரியுள்ளார்.

மேலும், எதிரே மோதுண்டவரிடமும், பாதிப்பில்லையென்ற கடிதத்தை பெற்றுவருமாறும் அதன் பின்னரே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்துக்கு வந்து, இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்த போக்குவரத்துப் பொலிஸாரை அழைத்த காயமடைந்தவர், வைத்தியருடன் உரையாடச் செய்துள்ளார். இதன்போது, தான் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்வதற்காக கடிதம் கோரியதாக வைத்தியர் கூறினார்.

இதன்போது, இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே சமரசம் செய்துவிட்டதாக போக்குவரத்துப் பொலிஸார் கூறினர்.

உரையாடல் முடிந்து வெளியில் வந்த குறித்த வைத்தியர், எனக்கு பொலிஸார், இராணுவத்தினரை நன்கு தெரியும் நீங்கள் எங்கும் செல்லுங்கள் பார்ப்போம் எனக்கூறிவிட்டுச் சென்றார்.

Related Posts