சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பொது மொழியான விளையாட்டுத் துறையை முன்னேற்றி நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றிளார்.

விளையாட்டு மைதானம் என்பது இன, மத, குல, பிரதேச பேதங்களின்றி அனைவரையும் ஒன்றுசேரக்கூடிய ஓர் இடம் என்று சுட்டிக்காடடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‘சிறந்த ஒழுக்கமுள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்காக விளையாட்டுத்துறைக்கு வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயார்’ என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மேலும் உரையாற்றுகையில் ‘ஒவ்வொருவருக்கும் இடையில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பி உள்ளங்களுக்கு ஆறுதலளிக்கும் சிறந்த ஒரு பொதுமொழியாக விளையாட்டுத் துறை விளங்குகிறது. இந்த பொது மொழியை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

ஒழுங்கீனமற்ற சமூகத்தை ஒழுக்கமுள்ளதாக மாற்றியமைக்கும் வகையில் விளையாட்டு மைதானம் மக்களின் மனதில் ஒழுக்கத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டிற்கும் முழு உலகிற்கும் இன்று ஒழுக்கம் என்பது அத்தியாவசியமாக அமைந்துள்ளது. எனவே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக முழு உலகமும் ஒழுக்கத்தை பேண வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய விளையாட்டுப்போட்டி 1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 50 வருடங்களுக்கு பின்னர் தேசிய விளையாட்டு போட்டி விழாவை விளையாட்டுத் துறை அமைச்சு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இம்முறையே முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் ‘விளையாட்டின் மூலம் ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்கது

Related Posts