சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் நேற்றய தினம் முன்வைக்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.
எனினும், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது உறுதிமொழிக்கு அமைய கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
இதன்படி, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடலை நடத்த இணக்கம் வெளியிட்டார்.
இதற்கமைய இந்தக் கலந்துரையாடல் நேற்றய தினம் கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை 4.50 அளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் சுமார் மூன்றரை மணிநேரம் நீடித்தது.
கலந்துரையாலின் இடையே கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் கலந்துரையாடலில் இருந்து எழுந்துச் சென்றார்.
இந்த நிலையில் இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டம் இல்லாத எந்தவொரு தீர்வையும் அரசாங்கம் வழங்கினால் அதனை நிராகரிக்கும்படி இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு இணைப்பானது மிகவும் கடினமானதாகும் என்பதோடு அதற்கு முஸ்லிம் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழரசுக் கட்சி சார்பில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதோடு, மக்களின் ஆணையை மீறியும், மக்களுக்கு தேர்தல் காலத்தில் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழியையும் மீறி செயற்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு செய்வதாயின் அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடாகவே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நிலைப்பாடாக இருக்கக்கூடாது என்பதையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் இரா. சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளனர்.