சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? முதலமைச்சரின் விரிவான விளக்கம்

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்-

கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமஸ்டி மட்டுமே சாத்தியமான ஒரேயொரு தீர்வு என தாங்கள் நம்புவதற்கான காரணம் என்ன?

பதில்: சமஸ்டி முறைமை என்பது பலம் வாய்ந்த தேசிய அரசாங்கத்திற்கும் சிறிய உள்ளுர் அரசாங்கங்களுக்கும் இடையில் அதிகாரத்தைப் பகிர்கின்றது. ஒரு நாட்டில் பல இன மக்கள் வாழும் போதும் அவர்கள் தமது வாழிடங்களை வரையறுத்துக் கொள்ளும் போதும், சிறுபான்மை மக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த ஆட்சி முறைமையாக சமஸ்டி ஆட்சி விளங்குகிறது. சமஸ்டி நிர்வாக முறைமையானது சிறப்பாக இடம்பெறும் நாடுகளில் கனடா மற்றும் சுவிற்சர்லாந்து முதன்மை பெறுகிறது. பிரென்ஞ் மொழியைப் பேசும் சிறுபான்மை மக்கள் வாழும் கனடாவின் கியூபெக் மாநிலமானது ஆங்கில மொழி பேசும் கனடாவின் ஏனைய மாநிலங்களிலிருந்து சமஸ்டி நிர்வாகத்தின் கீழ் பிரிவதற்கு மறுத்தது.

அதாவது இவர்கள் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் தமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செழுமைக்காகவும் பணியாற்ற வேண்டும் என ஒன்றுசேர்ந்து செயற்படுகின்றனர். அதாவது சிறிலங்காவில் உள்ள ஜோன் கீல்ஸ் மற்றும் அய்ற்கேன் ஸ்பென்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஒப்பானதாகும். தாய் நிறுவனத்திற்கு பல்வேறு சேய் மற்றும் துணை நிறுவனங்கள் உள்ளன. தாய் நிறுவனமானது தனது சேய் மற்றும் துணை நிறுவனங்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதில்லை. இவர்கள் தமக்கான ஒட்டுமொத்த மூலோபாய வழிகாட்டல்கள், வரவுசெலவுத் திட்டக் கோட்பாடுகள், சந்தை மற்றும் உற்பத்தி சார் கோட்பாடுகள் போன்ற பல்வேறு திட்டங்களை வரைந்து அவற்றுக்கேற்ப செயற்படுகின்றனர். ஆகவே இந்த நிறுவனங்களின் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எவ்வித விமர்சனங்களும் முன்வைக்கப்படமாட்டது. இந்த நடைமுறையை அரசியலிலும் செயற்படுத்த முடியாதா? அரசியலில் எமது வரலாறு என்பது பாரிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது.

நாடு சுதந்திரமடைந்த வேளையில் சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர். இக்காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியல் யாப்பின் 29வது நிபந்தனையானது சிறுபான்மையினருக்கு எதிராக பலவந்தத்தைப் பிரயோகிப்பதற்குத் தடைவிதித்திருந்தது. இதனை ஒழிப்பதற்கு சிங்களத் தலைவர்கள் போராட வேண்டியிருந்தது. இந்த நிபந்தனையை நீக்கி சிங்களம் மட்டும் என்கின்ற சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நாட்டின் 75 சதவீத மக்கள் ஆதரவு வழங்கினாலும் கூட வடக்கு கிழக்கின் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். உண்மையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினர் அல்லர். இவர்கள் தமது பிரதேசங்களில் பெரும்பான்மை மக்களாகவே இருந்தனர். ஆனால் தென்னிலங்கையின் ஏழு மாகாணங்களுடன் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தமையால் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர்.

அக்காலப்பகுதியில் செயற்பட்ட நாட்டின் அரசாங்கமானது தமிழ் மக்கள் வாழ்ந்த வடக்கு மற்றும் கிழக்கின் பிராந்திய மொழியாக தமிழ் என அறிவித்து அதன் மூலம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகள் எனப் பிரகடனம் செய்திருக்கலாம். சிங்கப்பூரில் நான்கு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் செய்யப்படும் நிலையானது சுதந்திரத்தின் பின்னர் அதிகரித்த போதிலும் கூட, 1919ல் பிரித்தானியாவானது இலங்கைக்கு சுயாட்சி வழங்கத் தீர்மானித்த போதே சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்டம் இரகசியமாகத் தீட்டப்பட்டது. கோடீஸ்வரன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி டீ கிறெஸ்ரால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் ஊடாக சிங்களம் மட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதேபோன்று தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட போது தரப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலகங்கள், திட்டமிடப்பட்ட சதிகள் போன்றன தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் அரசியல் உரிமைகளையும் இழப்பதற்குக் காரணமாகின. தற்போதும் நாங்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகிறோம். யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கில் 100,000 வரையான சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் எமது மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளில் தலையீடு செய்கின்றனர். இத்தலையீடானது சிலவேளைகளில் நேரிடையாகவும் சிலவேளைகளில் மறைமுகமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சதமேனும் வாடகை கொடுக்காது பொதுமக்களின் நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இந்தக் காணிகளின் உரிமையாளர்கள் இடம்பெயர்ந்தோர் முகாங்களிலும் தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வடக்கு மாகாணத்திற்குச் சொந்தமான கடலில் இராணுவத்தினரின் ஆதரவுடன் சிங்கள மீனவர்கள் சட்டரீதியற்ற வகையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். எமது மக்களால் அனுபவிக்கப்பட வேண்டிய 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளைக் கூட மத்திய அரசாங்கம் எமக்கு அனுமதிக்கவில்லை. வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் வடக்கைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களும் அடங்குவர். எமது பிரதேசத்திற்கு அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படும் அனைத்து நிதி மற்றும் திட்டங்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரத்தையும் மத்திய அரசாங்கமே கொண்டுள்ளது. சமஸ்டி நிர்வாகமானது தமிழ் மக்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள்வதற்கான சுதந்திரத்தையும் இத்தீவில் ஒற்றுமை நிலவுவதற்குமான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

ஐ.நாவால் 2015ல் உருவாக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் குறிப்பாக 16ம் இலக்கானது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம். ‘நிலையான அபிவிருத்திக்காக அமைதியை மேம்படுத்தலுடன் சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கும் எல்லா மட்டங்களிலும் உள்ள அனைத்து நிறுவகங்களும் பொறுப்புக் கூறுவதற்கும் நீதியைக் கட்டியெழுப்புவதற்குமான நிகழ்ச்சித் திட்டம்’ என்பதே 16வது இலக்காகக் காணப்படுகிறது. ஆகவே இந்த இலக்கானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.

முதலாவதாக அனைத்து வன்முறைகளும் குறைக்கப்பட வேண்டும். வடக்குமாகாணத்தில் 100,000 வரையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இவர்களே வன்முறைகளுக்குக் காரணமானவர்களாவர்.

இரண்டாவதாக, தேசிய மற்றும் அனைத்துலக மட்டங்களில் சட்ட ஆட்சியை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் அனைவருக்கும் நீதி என்கின்ற நிலையும் எட்டப்படவேண்டும். தற்போதும் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது அனைவரும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்குத் தடையாகவுள்ளது.

மூன்றாவதாக, அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான நிறுவகங்களை விருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

நான்காவதாக, ஐக்கிய நாடுகள் சபையால் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக தீர்மானம் எடுத்தலில் அனைத்து மட்டத்தவர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியாக, வட மாகாண சபையானது அனைத்து மட்டங்களிலும் மத்திய அரசாங்கத்தால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது. மத்திய அரசாங்கத்தாலேயே திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு எம்மிடம் வழங்கப்படுகின்றன.

ஐந்தாவதாக, நிலையான அபிவிருத்திக்காக பாரபட்சமின்றிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதுடன் அவற்றைப் பலப்படுத்த வேண்டும். தற்போதைய அரசியல் யாப்பில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் காணப்படுகின்றது. நீதிக்குப் புறம்பான சட்டங்கள் தற்போதும் நடைமுறையிலுள்ளன.

நாடு என்ற ரீதியில் எங்களை நாங்களே முன்னேற்ற வேண்டிய தேவையுள்ளது. நிதி மற்றும் வரவு செலவுத் திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் பாரபட்சங்களற்ற வகையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக சமூகமானது சிறிலங்காவிற்கு உதவவேண்டியது மிகவும் முக்கியமான விடயமாகும். சிறிலங்காவானது நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடாக உள்ள போதிலும் வடக்கு மாகாணமானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. சமஸ்டி நிர்வாகமே இதற்குத் தேவையான ஒன்றாகும். நாங்கள் பிரிவினை கோரவில்லை. தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவு செய்யக்கூடிய இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்திற்குப் பொருத்தமான சமஸ்டி நிர்வாக ஆட்சியை மட்டுமே நாம் கோருகிறோம். சமஸ்டி மட்டுமே தீர்வாகும் என நான் கூறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். 1926ல் SWRD பண்டரநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய கையோடு சமஸ்டி நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று தமிழ் மக்களுக்கு முன்னர் கண்டியர்கள் சமஸ்டி நிர்வாகம் வேண்டும் எனக் கோரினர்.

கேள்வி: தாங்கள் சமூக ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதன் மூலம் நாட்டில் இடம்பெறும் நல்லெண்ண முயற்சிக்கு குந்தகம் விளைவிக்க முயல்வதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: தமிழ் மக்கள் எப்போதெல்லாம் தமக்கான உரிமைகள் மற்றும் அரசியல் சார் பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதெல்லாம் சிங்கள மக்கள் புலிகள், புலிகள், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் எனக் கூச்சலிடத் தொடங்கிவிடுவார்கள்.

இதயசுத்தியுடன் நல்லிணக்க முயற்சியில் ஈடுபடுவதாக சிங்களத் தலைவர்கள் உலகிற்குக் காண்பிக்கின்றனர். இவர்கள் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்கமறுப்பதுடன் அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் சமூக ரீதியான வெறுப்புணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். உதாரணமாக, எழுக தமிழுக்குப் பின்னர் தற்போது கூறப்படும் கருத்துக்களாகும். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது இராணுவத்திற்கு எதிராகவோ அல்லது பௌத்த மதகுருமாருக்கு எதிராகவோ ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பதை நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். தமிழ்மக்களின் உணர்வுகளை உரைப்பதற்கான ஒன்றாகவே இந்தப் பேரணி இடம்பெற்றது என்பதை நான் அண்மையில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்த போது அது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது. அதாவது சிங்கள பௌத்தர்கள் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என விக்கினேஸ்வரன் தெரிவிப்பதாகவும் இதன்மூலம் இவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவதாகவும் தவறாகக் கற்பிதம் செய்யப்பட்டது.

நல்லிணக்கம் என்பது நடைமுறையிலுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக ஏராளமான நிதிகள் வருகின்றன. ஆனால் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாது எவ்வாறு மீளிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? நாங்கள் மீளிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் எமது மக்களின் ஆதங்கங்களும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். போரின் இறுதி நாட்களில் அல்லது அதற்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் இது வெறும் கனவாகவே உள்ளது. இவ்வாறான முக்கிய சில விடயங்களுக்கு நீதி காணப்படாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இவை தொடர்பாகக் கவனம் செலுத்தாது சமாதானத் திட்டங்களை வரைகிறது. அரசாங்கத்தின் இந்தச் செயலானது குதிரைக்கு முன்னால் வண்டிலை நிறுத்துவதற்கு சமமானதாகும். நான் ஒருபோதும் சமுதாயக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டவுமில்லை. ஒருபோதும் தூண்டவும் மாட்டேன். நான் சிங்களவர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்த ஒருவனாவேன். 1965ல் மகாநாயக்க தேரரை நயினாதீவுக்குக் கூட்டிச்சென்ற மதங்களின் நாடாளுமன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் உயிருடன் வாழும் ஒருவன் நான் மட்டுமே என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில் எழுகதமிழ் பேரணியில் நான் உரையாற்றும் போது, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பயந்தே வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தாது அச்சத்துடன் வாழ்ந்தனர் என நான் தெரிவித்திருந்தேன். இந்நிலையில் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி அதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கியமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன். நாங்கள் எமது உரிமைகள் தொடர்பாகக் கூறினால் அது இனவாதத்தைத் தூண்டுவதாக பழிசுமத்தப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற பேரணி போன்ற பல்வேறு பேரணிகள் உடைந்துபோன மக்களின் உணர்வுகளை வெளிப்படுவதற்கான ஒரு களமாக அமையும். ஆகவே இது தொடர்பாக எமது சிங்கள சகோதரர்கள் கொண்டுள்ள தவறான எண்ணத்தை அவர்கள் தங்களது மனங்களிலிருந்து தூக்கி வீசவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள மீளிணக்கத்தை நான் குழப்பவில்லை. அதற்கு மேலும் புத்துயிரளிக்கவே நான் முயற்சிக்கிறேன்.

கேள்வி: நீங்கள் மேற்கொண்டுவரும் பரப்புரைக்கான ஆதரவைப் பெற்றுள்ளீர்களா?

பதில்: அண்மையில் இடம்பெற்ற பேரணிக்கு அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதன் மூத்த உறுப்பினர்கள் சிலர் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். ஒருசிலர் மட்டும் தற்போது ஏன் இந்தப் பேரணி எனக் கேட்டிருந்தனர். எமது பதிலானது தற்போது ஏன் நடத்தக் கூடாது என்பதாக அமைந்தது. புதிய அரசியல் யாப்பானது எமது மக்களின் எதிர்பார்ப்புக்களைப் போதியளவில் நிறைவுசெய்யாவிட்டால், நாங்கள் எப்போதுமே எமது உணர்வுகளையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறமாட்டோம். தற்போதாவது இந்த உலகமானது எமது பிரச்சினைகளை அறிந்து கொள்ளட்டும். சிங்களவர்களும் கூட எமது உணர்வுகளைப் புரிந்து கொள்ளட்டும்.

வழிமூலம் – Sunday observer
செவ்வி கண்டவர் – Manjula Fernando
மொழியாக்கம் – நித்தியபாரதி

Related Posts