சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்: முதலமைச்சர்

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது. இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்று பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.

வெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந்த நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டி பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரித்தானியர்களிடமிருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம், அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்தும் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது.

அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையுமே தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தை தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதே போன்றுதான் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல் தீர்வொன்று வரும் என எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம்.

சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக கோரிய போது அவர் ஒரு உறுதி மொழியை அளித்தார் ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.

இலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா?’ என்று.

‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதமராக அதன் பின் பதவி ஏற்ற உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே. பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம்.

1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.

ஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம்.

அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Related Posts