சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ஜனாதிபதி

தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்-

”நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

ஆனால், நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாம் இணங்கியுள்ளதாலேயே ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளதாக சில அச்சு ஊடகங்கள் முதற்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தன. நாட்டின் ஊடகத்துறை இந்தளவு ஒழுக்கமற்று செயற்படுவதை முன்னிட்டு மிகவும் வேதனையடைகிறேன். செய்திகளை வழங்கும்போது சமூகத்திற்கு உண்மையை உரைக்க வேண்டும்.

அதேபோன்று, வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ள நிலையில், நாட்டை விற்கப் போகின்றோம் என சிலர் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். நாட்டில் கடந்த காலங்களில் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் வெளிநாட்டவர்களே அதிகமாக உள்ளனர். இதில் எங்காவது நாட்டை விற்பனை செய்துள்ளார்களா?

இன்று பலர் குறிப்பிடுவதைப் போன்று இந்நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தவோ நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்” என்றார்.

Related Posts