சமரச முயற்சி தோல்வி! – ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியான குணரத்தின என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவேப்புலம் வீதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினரால் நேற்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை, சம்பவத்தை காணொளியில் பதிவு செய்ய வேண்டாமென தெரிவித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

காயமடைந்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விசாரணைக்கு வந்த குறித்த பொலிஸ் அதிகாரி, சமரச முயற்சியில் ஈடுபட்ட போதிலும், ஊடகவியலாளர் சமாதானமாகாமையினால், தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Posts