சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில், மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும். பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச வைத்தியசாலைில் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பூநகரிப் பிரதேசம் குடிநீர் தட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு பிரதேசமாக அடையாளங்காணப்பட்டிருந்தது. இப்பிரதேசத்துக்கான குடிநீரை இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்தவையே.
எனினும், எமது மக்களின் தேவையை கொழும்பில் நிலைகொண்டிருக்கும் ஸ்ரீ சத்திய சாயி பாபா மத்திய நிலையம், சத்ய சாயி பாபா அறக்கட்டளையகம் மற்றும் சீரடி சாயி பாபா மத்திய நிலையம் ஆகியன உணர்ந்துகொண்டு இப்பகுதி மக்களுக்கான நீர்த்தேவையை நிறைவு செய்வதற்காக சுமார் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்புத் தாங்கி ஒன்றை நிறுவ முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
இறைபணி என்பது வெறுமனே ஆலயங்களை அமைப்பதோ அல்லது தியான மண்டபங்களை அமைப்பதோ அல்ல. மாறாக ஆலயங்களை நடத்திக் கொண்டு, தியான மண்டபங்களைப் பராமரித்துக் கொண்டு, அறநெறி வகுப்புக்களை நடாத்திக் கொண்டு சமய நிகழ்வுகளுடன் இணைந்து பொதுமக்கள் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதே இறைபணியாகும். உங்கள் சமய நிலையங்கள் இவ்வாறான சிறந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுவருவது எமது சமய சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேலும் மெருகூட்டுவதாக அமைகின்றது.
போருக்குப் பின் வட மாகாணம் முற்றுமுழுமையாக நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் மக்கள் பல்வேறு தேவைகளை உடையவர்களாகக் காணப்பட்டதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். தமது சொத்துக்கள், வீடு, வாசல், பொருள், பண்டம், வாகனங்கள், ஜீவனோபாய தொழில் முயற்சிகள் என அனைத்தையும் இழந்த எமது மக்கள் பலரை, எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் வடமாகாண சபைக்கு இவ்வாறான உதவிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள் என்பன வலுவூட்டுகின்றன.
கடந்த வருடங்களில் வட பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்கள் ஆகியோருக்கு கல்விசார் உதவிகளையும் விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகளையும் புரிவதற்காக கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய நலன்புரிச்சங்கம், மற்றும் ஜெயச்சந்திரன் நிறுவனத்தினர் இணைந்து கொண்டு பல்வேறு பெறுமதி மிக்க உதவுப்பொருட்களை நாம் கேட்டவுடனேயே உதவினார்கள். இவ்வருடமும் கிளிநொச்சியில் 500 மாணவ மாணவியர்க்கு கல்விசார்ந்த உதவி ஊதியங்கள் வழங்கியுள்ளார்கள் என்றார்.
“பசித்தவனுக்கு ஆத்மீகம் பற்றிப் பேசுவதில் பயனில்லை என்றார் சுவாமி விவேகானந்தர். அதே நேரத்தில் எம்மைச் சுற்றி வறுமையும் இயலாமையும் தாண்டவமாடும் போது நாம் ஆத்மீகவாதிகள் என்று ஒதுங்கி இருப்பதும் உசிதமாகாது. ஆத்மீகம் என்பது அன்பு வழியது. அந்த அன்பை நடைமுறையில் நாங்கள் வெளிப்படுத்தத் தானமே சிறந்த வழி. பல ஆலயங்கள், கோயில்கள், வணக்கஸ்தலங்கள் ஆகியன தமக்குக் கிடைக்கும் பணத்தை சேமித்து வைக்கின்றார்கள். அவை வட்டி போட்டாலும் குட்டி போட்டாலும் அப் பணத்தால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் எதுவுமில்லை. எப்போதோ வரும் தேவைக்காகச் சுற்றியுள்ள மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கின்றார்கள், எமது கோயில் தர்மகர்த்தாக்கள். இது தகாத ஒரு செயல்.
மனமிருந்தால் மார்க்கம் இல்லாது போகாது. அன்பானது மனதில் வேரூன்றி விட்டதென்றால் மற்றவையெல்லாம் தாமாகவே நடைபெறுவன” எனவும் தெரிவித்தார்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்