யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 107ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டம் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான நிலையில் சனிக்கிழமை சமநிலையில் முடிவடைந்துள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பூபாலசிங்கம் டர்வின் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, அணித்தலைவர் ஜெயகுமார் அமிடஜனின் பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் 70.1 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
மத்திய கல்லூரி அணித் தலைவர் பூபாலசிங்கம் டர்வின் 2 இலக்குகளை வீழ்த்தினார். பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை ரவீந்திரன் லோகதீஸ்வரனின் சுழல்பந்துவீச்சுக் கட்டுப்படுத்த, அவ்வணி 103 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 146 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. லோகதீஸ்வரன் 49 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை வீழ்த்தினார்.
37 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது, இன்னிங்ஸிற்காக களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, விரைவாக ஓட்டங்களைப் பெற்றது. 143 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை இழந்தபோது அவ்வணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்கான ஆட்டத்தினை இடைநிறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு 180 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸிற்காகக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, போட்டியை சமநிலைப்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தியது.
போட்டி முடிவடையும்போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 4 இலக்குகள் இழப்பிற்கு 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித்தலைவர் பூபாலசிங்கம் டர்வின் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.வீழ்த்தப்பட்ட இலக்குகளில் 3 இலக்குகளை ரவீந்திரன் லோகதீஸ்வரன் வீழ்த்தினார்.