‘சபாஷ் நாயுடு’ படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றார் கமல்!

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் படத்தை தயாரிக்கிறது. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படம் இது. தந்தை – மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா பணியாற்றி வருகிறார்.

kamal-sabas-naidu

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக்கப்படுகிறது. 1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைகிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மே 16-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்கும் என்று கமல் முதலில் அறிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை முடிக்க சிறிது தாமதம் ஆனது. இதனையடுத்து அவர் கடந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றார். ஜூன் 6 முதல், படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாடல் ஒன்றை இயக்கினார் கமல். இதுகுறித்த தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்தார். ராஜீவுக்கு உடல்நலக்குறைவு. எனவே நடனத்தை இயக்கி வருகிறேன். இயக்குநர் விரைவில் நலம்பெறுவார் என்று ட்வீட் செய்தார்.

இந்நிலையில், தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

என்னுடைய இயக்குநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நான்காவது நாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது இந்த நிலைமை ஏற்பட்டது. ராஜீவுக்கு லைம் (Lyme) நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஏற்படுகிற மிக அரிதான நோய் பாதிப்பு. அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் நான் தற்போது படத்தை இயக்கி வருகிறேன். லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள மருத்துவமனையில் சிறப்பான முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எங்கள் குழுவில் உள்ள ஒருவர் 24 மணி நேரமும் அவரைக் கண்காணித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

Related Posts