சபரகமுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஆனால், நிர்வாகத்தின் முடிவையும் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக கட்டடங்களுக்குள்ளேயே தங்கியிருப்பதற்கு மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
முன்னதாக, மாணவிகளுக்கான இரண்டு தங்கும்-விடுதிகளை திறந்துவைப்பதற்காக அங்கு வந்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வீதியை மறுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
பொலிஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து மாணவர்களை கலைத்த பின்னர், உயர்கல்வி அமைச்சர் மாணவிகளின் விடுதிகளை திறந்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விடுதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் திறந்துவைத்துள்ளதாக மாணவர் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
இந்த விடுதிகளில் தங்க மறுக்கின்ற மாணவிகள் நிர்வாகத்தையும் மீறி, ஆண்களின் விடுதிகளில் தங்க, ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதாக சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் தேவராசா தினேஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், சகல வசதிகளுடனும் மாணவிகளுக்கான புதிய தங்கும்விடுதிகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டங்களின் பின்னணியில் அரசியல்கட்சி ஒன்று இயங்குவதாகவும் அவர் கூறினார்.
எனினும், மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதை மாணவர்கள் எதிர்க்கின்றனர்.