சன்சீ கப்பலில் கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே கொல்லப்பட்டார்.

அவர் தனக்குத் தெரிந்த முகவர் ஊடாக சன்சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார்.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. தற்போது அவர்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்பதனை அங்குள்ள உறவினரைக் கொண்டு பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்து உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான தகவல்களை விரைவில் அறிவிக்கப்படும் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts