சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி சோடிக்கப்பட்ட ஒரு பொய் என அப்போது ஆட்சியிலிருந்த மகிந்தராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துவந்த நிலையில் இப்போதைய அரசாங்கத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா இராணுவத்தினரின் உடையணிந்த சிலர் 2009ஆம் ஆண்டு உயிருடன் பிடிக்கப்பட்ட சில போராளிகளை நிர்வாணமாக்கி, கைகளை பின்னுக்குக் கட்டி சுட்டுக்கொல்லும் காணொளியை ஜே.டி.எஸ் என்ற இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தது.
இந்தக் காணொளி ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் காணொளி உட்பட மேலும் பல போர் குற்ற ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகின் முன்னணி ஆவணப்படத் தயாரிப்பாளரான கெலம் மெக்ரே தயாரித்த மூன்று ஆவணப் படங்களையும் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இது சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய் எனவும் இப்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையெனவும் தெரிவித்து வந்ததுடன், இதுவரை அந்தச் சம்பவம் தொடர்பில் மௌனம் காத்துவந்தது.
இந்த நிலையிலேயே சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே இராணுவத்தினர் இந்தப் படுகொலையை புரிந்துள்ளதாகவும் இந்த கொடூரங்களை விரும்பாத இராணுவத்திலிருந்த சிலரே காணொளியை வெளியில் அனுப்பியிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுவரும் பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே இந்தவிடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சியில் இருக்கும் போது அரசியல் லாபத்திற்காகவே மஹிந்த ராஜபக்ச தன்னை மனித உரிமை பாதுகாவலராக அடையாளப்படுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள மங்கள சமரவீர, ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் அவர் எந்தளவிற்கு சந்தர்ப்பவாதி என்பதும் தேச விரோதி என்பதும் தெளிவாகப் புலப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.