சந்திரசிறியின் மீள் நியமனம் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசனம்

vicky0vickneswaranவடக்கு மாகாண ஆளுநராக ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விசனமடைந்திருக்கிறார் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாண சபை தனியாக உருவாக்கப்பட்டமையை அடுத்து 2009 ஆம் ஆண்டு ஜூலையில் அதன் முதலாவது ஆளுநராக ஐந்து வருடங்களைக் கொண்ட பதவிக் காலத்துக்கு ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் இரண்டாவது தடவையாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் அந்தப் பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மின்னஞ்சலில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நான் விசனமுற்றுள்ளேன். சந்திரசிறியின் பதவிக்காலம் முடிந்ததும், இராணுவப் பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவரைத் தாம் புதிய ஆளுநராக நியமிப்பார் என கடந்த ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி எனக்கு உறுதியளித்திருந்தார்.

தன்னுடைய உத்தரவை மொட்டையாக அப்படியே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தக் கூடிய ஒரு சிவிலியனைத் தனது அதிகாரிகளிடையே தேடிய ஜனாதிபதிக்கு அப்படி ஒருவர் கிடைக்காமல் போனமையால் அவர் இப்படி நடந்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது குடும்பத்தவர்களுடன் சென்று இணைவதற்கு எண்ணியிருந்த சந்திரசிறி இப்படி ஜனாதிபதிக்கு கைகொடுத்து உதவுவதற்கு முன்வந்தமைக்காக அவரை நான் பாராட்ட வேண்டும்.

இந்த நியமனம் மற்றொரு வாக்குறுதி மீறலாக அமைகின்றது. அத்தோடு தமிழர்களுடன் ஒத்துழைத்து, கூட்டுச் சேர்ந்து, செயற்படாமல் இறுக்கமான, இராணுவப் போக்கு உறவே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படப் போகின்றது என்பதற்கு இது ஒரு சமிக்ஞையுமாகும்.

இப்படி முதலமைச்சர் அந்த மின்னஞ்சல் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts