Ad Widget

சத்தமில்லாத போராக எமது விவசாயத்தை நசுக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன – விவசாய அமைச்சர்

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், துப்பாக்கிகள் முழங்காத போதும் சத்தமில்லாத ஒரு போராக எமது விவசாயத்தை நசுக்குகின்ற, விவசாயிகளை நலிவடையச் செய்கின்ற நடவடிக்கைகள் இன்னமும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ankaranesan-1

ஏழாலையில் நேற்று வியாழக்கிழமை உருளைக்கிழங்குப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நடைபெற்றது. மத்திய அரசின் விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகளும், உருளைக்கிழங்குச் செய்கையாளர்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம்தான். மூன்று தசாப்த காலப் போர் அந்த முதுகெலும்பை முறித்துப்போட்டுள்ளது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட வடக்கின் விவசாயத்தால் முன்னரைப் போன்று நிமிர்ந்து நிற்க முடியவில்லை. வடக்கின் பொருளாதாரத்தைத் தாங்கி நின்ற எமது விவசாயிகள் அவர்களது குடும்பப் பொருளாதாரத்தையே சுமக்க முடியாத அளவுக்கு திண்டாடுகிறார்கள். விவசாயக் கடன்களின் சுமை அவர்களது பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது. தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர்களில் பலர் அழுது அரற்றுகிறார்கள். கால நிலை மாற்றங்களால் விவசாயம் பொய்த்துப் போவது மாத்திரம் இதற்கான காரணமாக இல்லை.

யாழ்.மாவட்டத்தில் பயிர்ச்செய்கைக்குப் பிரசித்திபெற்ற பிரதேசம் வலி.வடக்கு. வளம் மிக்க அந்தப் பிரதேசத்தில் ஏறத்தாழ 6400 ஏக்கர்கள் அளவு இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளன. 25 வருடங்களுக்கு முன்னர் அந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்ட அந்த மண்ணின் சொந்தக்காரர்கள் இன்னும் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும்தான் தங்கியுள்ளார்கள். தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீளவும் பயிர்ச்செய்து வாழ்வதற்கு என்று அவர்கள் எவ்வளவோ போராட்டங்கள் நடாத்தியும் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை.
ஆனால், எமது மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில் இராணுவம் பயிர் செய்கிறது. அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வருகிறது. யாருக்கும் அவர்கள் குத்தகை கொடுக்கவேண்டியதில்லை. எல்லாமே அவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதால், குறைந்த விலையில் அவர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்கிறார்கள். இந்தச் சந்தைப் போட்டியால், உற்பத்திகளை உரியவிலைக்கு விற்க முடியாமல் எமது விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பொது மக்களின் விளைநிலங்கள் மாத்திரம் அல்ல, எமது வட மாகாண விவசாய அமைச்சின் சொத்துகள்கூட படையினர் வசம் உள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சியில் விதை உற்பத்திப் பண்ணை, இரணைமடுச் சந்தியில் சேவைக்காலப் பயிற்சி நிலையம், வவுனியா கனராயன்குளத்தில் தாய்த்தாவரப் பண்ணை, மன்னாரில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர்கள் பரப்பளவு இராணுவத்திடம்தான் உள்ளது. இந்த நிலையில் விவசாயம் தொடர்பான ஆய்வுகளை நாம் எங்கே மேற்கொள்வது? விவசாயப் போதனாசிரியர்களுக்கான பயிற்சிகளை எங்கே வழங்குவது?

இவை மாத்திரமல்ல, எமது பிரதேசத்தில் என்ன பயிர்களை நாம் பயிரிடவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமைகூட எம்மிடம் இல்லை.

அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கரும்புச் செய்கைக்கென 71 ஆயிரத்து 716 ஏக்கர் பரப்பளவு நிலத்தைச் சுவீகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர்க்காலத்தில் சீனி இல்லாமல் அல்லது சீனிக்குப் பதிலாகப் பனங்கட்டியுடன் தேநீர் அருந்திய தமிழர்களுக்கு இந்தக் கரும்பு உற்பத்தி இனிப்பான செய்தியாக இருக்கும் என்று சிலவேளை அரசாங்கம் நினைக்கக் கூடும். ஆனால், எந்த விதத்திலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கரும்பு மிகப் பெருமளவுக்குத் தண்ணீர் தேவைப்படுகின்ற ஒரு பயிர். ஒரு கிலோகிராம் சீனியை உற்பத்தி செய்வதற்கு ஏறத்தாழ மூவாயிரம் இலீற்றர் தண்ணீர் செலவாகிறது.

ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறைவை அனுபவித்துக்கொண்டிருக்கும் வடக்கில் கரும்புச் செய்கையை அரசு மேற்கொள்ள முயல்வது பலத்த சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. எமது உணவுப் பயிர்களின் நிலத்தை ஆலைப்பயிர்களுக்கென்று விழுங்குவதன் மூலம் உணவுக்காக வடக்குத் தமிழர்கள் எப்போதும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று அரசு நினைப்பதாகவே நாம் கருதுகிறோம். அத்தோடு எமது நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் ஒரு நிகழ்ச்சி நிரலாகவுமே இதனைக் கருதுகிறோம். எமது கடந்தகாலப் படிப்பினைகள் இவ்வாறுதான் நினைக்க வைக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

Related Posts