சதாம், கடாபியின் கதியே மஹிந்தவுக்கும் ஏற்பட்டிருக்கும்! – எஸ்.பி.திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அவரது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி,ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இன்று அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேவையில் இலங்கை தொடர்பாக முன்னெக்கப்பட்ட விசாரனை நடவடிக்கையானது மிகவும் வலுபெற்றிருந்தது.

அவ்வாறான நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச தேர்தல் ஒன்றுக்கு அறிவித்தல் விடுத்து சக்திமிக்கதான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி குறித்த பிரச்சினைகளை கையாள திட்டமிட்டிருந்தார்.

மஹிந்தவின் திட்டத்தின் படி அன்றைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் எமது நாடு சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிட்டிருப்பதேர்டு சர்வதேச நாடுகளின் நாட்புறவையும் இழந்திருப்போம்.

மறுபுறம் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி, ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இவருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.

கடந்த வாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மனித உரிமை உரிமை விவகாரம் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றதோடு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி குறித்த பிரேரணையானது வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரரேணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அதிருப்தியையும் இதனை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது என்ற கருத்தினையும் தெரிவித்திருந்தார்.

அவரின் ஆட்சிகாலத்தில் மனித உரிமை தொடர்பில் வாக்குறுதியளித்தவற்றை செயற்படுத்த எமது நாடு தவறியமையினாலேயே நாம் சர்வதேச நாடுகளின் அதிருப்திக்கு ஆளானதோடு ஜி.எஸ்.பி வரி சலுகை போன்றவற்றை இழக்க நேரிட்டது.

இன்று தேசிய அரசாங்கத்தின் கீழ் இவை அனைத்தும் மாற்றம் பெற்று வருகின்றன.

இவ்வாறான மாற்றம் ஒன்றை முன்னெடுத்து வரும் நிலையில் ஒரு சில தரப்பினர் ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பிரகாரம் விசாரணை முற்று முழுவதுமாக இராணுவத்தினரிடமே முன்னெடுக்கப்பட போவதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

காரணம் எமது இராணுவத்தினரினால் எவ்வித குற்றச்செயல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை சர்வதேசத்திடம் தெரிவிப்பதற்கு இதுவே எமக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக காணப்படுகிறது.

விடுதலை புலிகளினால் முன்னெக்கப்பட்ட யுத்த குற்றசாட்டுகளை சர்வதேசம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்வதற்கு இச் சந்தர்ப்பம் வாய்ப்பாக அமையும்.

எனவே எதிர்வரும் காலத்தில் குறித்த பிரேரணையின் அடிபடையில் யுத்த நடவடிக்கையின் போது உண்மையில் நடந்தது என்ன, பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, குறித்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு, சட்டம், நீதித்துறைகளை சுயாதீனமாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட நான்கு விடயங்களை அடிபடையாக கொண்டே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts