சட்டவிரோத மண் அகழ்வாளர்களால் தாக்கப்படும் பொதுமக்கள்

யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களால், அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் அவர்களால் அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியுள்ள மணியந் தோட்டம், உதயபுரம், பூம்புகார், கிழக்கு அரியாலை, நாவலடி போன்ற பிரதேசங்களிலுள்ள கடற்கரை மண் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டு வருகின்றது.

கடற்கரை மண் இவ்வாறு அகழப்பட்டு வருவதனால், அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடல் நீர் நன்னீருடன் கலப்பதனால் குடிநீரும் மாசடைந்து வருகின்றது. இதே வேளை மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்யும் அப் பகுதி மக்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். மேலும் பொலிஸாருக்கு அஞ்சி , மண் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் மிகவும் வேகமாக செலுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் ஐந்து வயதுப் பிள்ளையும் அதன் தகப்பனாரும் இப்படியொரு சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

வேகமாக வந்த மண் ஏற்றப்பட்ட உழவு இயந்திரம் ஒன்றிற்கு வழிவிடத் தாமதமானதால் , குடும்பஸ்தர் ஒருவரும் அவர்களால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் சட்டவிரோத மண்அகழ்வு குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுப்பவர்களை எச்சரித்தும் தாக்கியும் வருகின்றனர். மண் அகழ்வினால் தமது கரையோரப் பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதேவேளை அகழ்வில் ஈடுபடுபவர்களால் அச்சுறுத்தல் விடப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரிப்பதனால் பெரும் மனஉளைச்சலையும் பாதிப்புகளையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்ததோடு இப்பேர்ப்பட்ட பாதிப்புகள் நடைபெறாவண்ணம் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts