யாழில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரச அனுமதி பெற்று கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கும் ஏ.எஸ்.கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாது, கேபிள் ரீவி இணைப்புகளை வழங்க, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கியவர்களின் இணைப்புக்கள் கொழும்பிலிருந்து வருகைதந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் தற்போதும், சட்டவிரோத கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள சில நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி ஏஎஸ்கே நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏஎஸ்கே நிறுவனத்தின் கேபிள் இணைப்புக்கள் யாழின் பல்வேறு இடங்களிலும் கடந்த 3 வார காலத்துக்குள் சில கும்பல்களால் வெட்டித் துண்டாடப்பட்டன. அவை தொடர்பில் குடாநாட்டிலுள்ள சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.