சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் தறிக்கப்படுவதது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கபடுகின்ற போதும் அது குறித்து சட்டநடவடிக்கைகள் எதனையும் பொலிஸார் எடுப்பதில் முனைப்புக் காட்டுவதில்லை. இதனால் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடியாது உள்ளது என பனை அபிவிருத்திச் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் தமது சொந்தப் பாவனைக்கு என பனை மரங்களை வெட்டப்படும் போதும் பிரதேச செயலகத்தில் வெட்டப்படும் பனை மரங்களின் எண்ணிக்கை இடப்பட்டு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட்டால் பனை அபிவிருத்திச்சபையின் உத்தியோகஸ்தர்கள் நேரில் பார்வையிட்டு அனுமதியினை வழங்குவர். எனினும் அனுமதி இன்றி வெட்டப்படும் பனைகள் தொடர்பில் பொலிஸாருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் இது குறித்து நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.
எனினும் சட்டவிரோத பனை வெட்டுதல் குறித்து நாங்கள் பொலிஸாருக்கு அறிவிக்கலாமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் தடை செய்யும் நோக்குடன் பொலிஸார் சட்டரீதியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.