தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பைபர் படகில் வந்த இலங்கை அகதியை உளவுப்பிரிவு பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 16ம் திகதி பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த இப்படகு இந்தியா வந்தது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அமலதாஸ் மகன் அந்தோணிதாஸ் (42) என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன.
இதன்படி, மண்டபம் அகதிகள் முகாமில் 17 ஆண்டுகளாக வசித்து வந்த அந்தோணிதாஸ், இலங்கைக்கு வந்து, மீண்டும் கடந்த 15ம் திகதி பைபர் படகில் புறப்பட்டு 16ம் திகதி தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார்.
பின்னர் கடற்கரையில் படகை மட்டும் நிறுத்திவிட்டு, மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், அங்குள்ள ஒருவரை சந்தித்து விட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்வதே அவரது திட்டம் என கூறப்படுகின்றது.
இதையடுத்து, அந்தோணிதாஸை உளவுப்பிரிவு பொலிஸார் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.