தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து, நாடுகடத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சட்டமா அதிபரிடம் அனுமதி கோரப்பட்டது.
எனினும், அப்போது சட்டமா அதிபராக இருந்தவர் இதற்கு அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று முக்கிய இரண்டு குற்றவாளிகள் உட்பட அனைத்துக் குற்றவாளிகளையும் சிங்கள ஜூரிகள் சபை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்திருந்தது.
இருப்பினும் தற்போதைய சட்டமா அதிபர் இதற்கு எதிரா மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் கிளிவெட்டிப் படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவருக்கும் எதிராகவும் மேன்முறையீடு செய்யப்போவதாக சட்டமா அதிபர் அறிவித்தும் இதுவரை மேன்முறையீடு செய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.