சட்டமன்றத் தேர்தலில் இருந்து வைகோ திடீர் விலகல்!

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ம.தி.மு.க தலைவர் வைகோ திடீரென்று அறிவித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் கோவில் பட்டித் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று மதிமுக சார்பில் கோவில்பட்டித் தொகுதியில் விநாயக் ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தான் சார்ந்துள்ள சாதிக்கு 70,000 வாக்குகள் இருப்பதாகவும், வைகோவின் சாதியினருக்கு 52,000 வாக்குகளே இருப்பதாகவும் அதனையும் அதிமுக வேட்பாளர் பிரிப்பார் எனவும் கூறிவருகின்றார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தொகுதியில் திமுக சாதிக் கலவரம் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்குத் திட்டக்குளப் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு தான் மாலைபோடப்போகும்போது, அதனை எதிர்த்து சிலர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அத்துடன் சாதிக் கலவரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் வைக்கோ கூறியுள்ளார்.

இதன் காரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலை ஒழிக்கவும், மதுவிலக்கைக் கொண்டுவரவும், சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்கவும் தனது எஞ்சியிருக்கும் வாழ்நாளைச் செலவழிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிசக்கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிசக்கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் மக்கள் நலக் கூட்டணியில் வைகோ தலைமையிலான மதிமுக இடம்பெற்றிருக்கின்றது.

வைகோவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts