சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்திலுள்ள பல வர்த்தகர்கள் சட்டத்தை மீறி பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

யாழ்.மாவட்ட வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் பலவற்றின் அட்டையில் ஒரு காலாவதி திகதியும், உள்ளிருக்கும் பைக்கற்றில் இன்னொரு காலாவதி திகதியும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

முகத்துக்கு பூசும் கிறீம், பிஸ்கட் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாணின் நிறை 450 கிராம் என்ற நிர்ணய அளவுக்கு உற்பத்தி செய்யாமல், 300 தொடக்கம் 350 கிராம் வரையில் உற்பத்தி செய்கின்றார்கள்.

மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட 59 வர்த்தகர்கள், கடந்த மாதம் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகை தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக, குழுவொன்று நியமித்துள்ளேன். அந்தக்குழு தமது பணிகளை முடுக்கி விட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

ஆகவே வர்த்தகர்கள், மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு சட்டத்திற்கு முரணான எந்த வேலைகளையும் செய்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.

Related Posts