தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம். ஜெவ்ரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு செய்திகள் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைகளை முறையிடுவதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
எனவே இந்த பிரிவிற்கு தமிழ் பொலிஸாரே கடமைக்கு அமர்த்தப்படுவர். பாதிக்கப்படுபவர்கள் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமிடத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்துடன் தேர்தல் காலங்களில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்வார்களாயின் அவர்களுடைய பிரச்சாரங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவார்கள்.
மேலும் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கு யாழ்ப்பாணத்தில் தற்போது கடமையில் உள்ள பொலிஸாரே கடமைகளை மேற்கொள்வார்கள். எமக்கு கட்சி பேதம் கிடையாது . தேர்தல் நியாயமானதாகவும் மக்கள் சுதந்திரமாகவும் சென்று வாக்களிப்பதற்கு பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.