வேலணை சிற்பனைப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணான அருளப்பு அல்வினம்மா (70) கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தின் முகத்தில் கல்லினால் குத்திய காயங்களும், கைகளில் தடியினால் அடித்த காயங்களும் இருப்பதாக பொலிஸார் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
மேற்படி பெண்ணிற்கு வேலணையில் ஒரு மகளும், நாரந்தனையில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் இரு மகள் வீட்டிலும் மாறிமாறி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேலணைப் பகுதியிலுள்ள தனது மகளது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (04) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பொருட்கள் வாங்கச் சென்றவர் மீண்டும் திரும்பாததையடுத்து மகளினால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தாயாரினைக் காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை (05) தோட்ட வேலைக்குச் சென்ற ஒருவர் சிற்பனைப் பகுதியில் சடலமொன்று இருப்பதாகத் தெரிவித்தமையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் மேற்படி சடலத்தினை ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.