சச்சின்-வார்னே கூட்டணியில் உருவாகுகிறது முன்னாள் வீரர்களுக்கான புதிய டி20 தொடர்!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து, முன்னாள் வீரர்களுக்கான டி20 தொடர் நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

warne_tendul-sachhen

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் புகழ் பெற்றுள்ளது. ஆனால், முன்னாள் வீரர்களுக்கு இதில் இடம் கிடைப்பதில்லை. அவர்களை ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்து கை கழுவி விடுகின்றன ஐபிஎல் நிர்வாகங்கள்.

இதனால் சச்சின், மெக்ராத், கில்கிறிஸ்ட், கல்லீஸ் போன்ற எவர்கிரீன் ஸ்டார்களின் ஆட்டத்தை தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்துவிடுகின்றனர்.

புதுமுகங்கள், மாங்கு மாங்கென்று அடிக்கும் ஆட்டத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் ரசிகர்களுக்கு, ஜாம்பவான்களின் நேர்த்தியான மட்டை வீச்சு மற்றும் பவுலிங் திறமையை பார்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

இக்குறையை போக்க மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாம்பவான் ஸ்பின்னர் ஷேன் வார்னே இருவரும் இணைந்து திட்டம் வகுத்துள்ளனர். இதன்படி, மாஜி ஜாம்பவான் வீரர்களுக்காக பிரத்யேக டி20 போட்டிகளை நடத்த இவ்விரு வீரர்களும் திட்டம் வகுத்துள்ளனர்.

இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சச்சின், வார்னே, கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரெட் லீ, ஜேக் கல்லீஸ், நில் மெக்கன்சி, ஆட்ர்டூ பிளிண்டாப் உள்ளிட்ட 28 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 15 டி20 ஆட்டங்கள் ஆட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ஆட்டம் தொடங்கும். அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்தியாவை சேர்ந்த எஸ்ஸல் குரூப், ஐசிசிக்கு போட்டியாக ஒரு கிரிக்கெட் அமைப்பை உருவாக்க முயலுவதாக தகவல்கள் வெளிவரும் இந்த சூழ்நிலையில், சச்சின்-வார்னே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts