சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் நேற்று மாலை சரண் அடைந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால், சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கருதிய நீதிபதிகள், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதியின் முன் சரணடைய உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வந்த சசிகலா மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தார். சசிகலாவுடன் காரில் வந்த இளவரசியும் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.