சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது.
இதுவரை போயஸ்கார்டனில் தங்கியிருந்த சசிகலா தீர்ப்பு அறிவிப்புக்கு முந்தைய நாளான நேற்றிரவு சென்னைக்கு வெளியே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கினார். அங்கு மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்டுள்ள ஏராளமான குண்டர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நுழைந்தனர். 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினரும் ரிசார்ட்டுக்குள் புகுந்துள்ளனர்.
50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திறங்கிய காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் ரிசார்ட் தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூவத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
போலீசார், அதிரடிப்படையினர் குவிப்பால் சசிகலா கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை போலீசார் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருந்த நிலையில் தற்போது ரிசார்ட்டுக்குள் அவர்கள் நுழைந்திருப்பது மன்னார்குடி கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவால் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களும் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.