சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் ஏ – 32 வீதியின் (யாழ்ப்பாணம் – மன்னார்) சங்குப்பிட்டி பாலம் மற்றும் ஏ – 9 (யாழ்ப்பாணம் – கண்டி) வீதியின் ஏதாவது ஒரு இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியை அமைத்து, பயணிகள் வாகனங்கள் தவிர்ந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோருவது என்பது தொடர்பில் வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட 140 ஆடுகள் ஓமந்தையில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வளர்த்த ஆடுகளே திருடப்பட்டு இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தெரியவந்ததாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் முறையிட்டுள்ளனர். எனவே, சட்டவிரோதக் கடத்தல்கள் தொடர்பில் கண்டறிவதற்கு யாழ்ப்பாணத்தின் நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதின் முக்கியத்துவத்தை தலைவர் சபைக்கு எடுத்துக்கூறினார்.
ஏற்கெனவே பூநகரி, சங்குப்பிட்டி பாலப்பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏ – 9 வீதியில் ஏதாவதொரு இடத்தில் சோதனைச் சாவடியை அமைக்கப்படவேண்டும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இதனை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.