சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைக்க நடவடிக்கை

meeting_poongaயாழ். – பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த புனரமைப்பு பணி தொடர்பான விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை யாழ். மாநகர சபை மண்டபத்தில் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இதனை சிறந்தமுறையில் பயன்படுத்தக் கூடிய வகையில் யாழ். மாநகர சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பூங்கா நிர்மானிக்கப்படவுள்ளது.

நவீன முறையில் பூங்காவின் மாதிரி உத்தேச விபரணப்படம் கட்டிடக்கலை நிபுணர்களினால் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை மையப்படுத்தக் கூடிய வகையில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளதுடன் யாழில் வாழுகின்ற மக்கள் விரும்புகின்ற வகையில் இந்த பூங்கா வடிவமைப்படவுள்ளது.

அத்துடன் இந்த பூங்கா 1995ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளினால் கிட்டு பூங்கா என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்குள்ள கற்பாறைகள், நீர்த்தடாகம், கோயில், நூழைவாயில் போன்றவற்றில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாத வகையில் இது அமைக்கப்படவுள்ளது.

இந்த பூங்காவில் விசேடமாக சிறுவர் பகுதி, உள்ளக அரங்கு போன்றன அமைக்கப்படவுள்ளதோடு மக்களால் பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களைக்கொண்டு நவீன முறையில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், சங்கிலியன் மன்றத்தினர், வணிகர் கழகத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts