சங்காவின் இறுதிப் போட்டியை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு இலவச அனுமதி

இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா பங்குபற்றி விளையாடவுள்ள அவரது இறுதி போட்டியை பார்வையிடுவதற்கு தென்மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இந்தியாவுக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே இவ்வாறு இலவச டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கிரிக்கெட் வீரர்கள், ஆண் மாணவர்கள், பெண்கள் என அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. எனவே இந்த விசேட செய்தியை அனைத்து பாடசாலை அதிபர்களும் தமது மாணவர்களுக்கு தெரியப்படுத்தி இலங்கை கிரிக்கெட் துறையின் தூதுவராக தொழிற்படும் குமார் சங்கக்காரவுக்கு அளவற்ற சந்தோஷத்தையும் வெற்றியினையும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

போட்டி இடம்பெறும் தினத்தன்று அனைத்து மாணவர்களும் தமது பாடசாலை சீருடைகளுடன் வந்து தமக்கான இலவச டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்திய போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts