சங்கத்தானையில் அட்டகாசம் – இருவரை காவற்துறையினர் துரத்திப் பிடித்தனர்

வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர் காரில் வந்துள்ளார். அதன் போது காரை பின் தொடர்ந்து சென்ற குழுவினர், குறித்த நபர் காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த நபர் கும்பலின் தாக்குதலில் இருந்து காரில் தப்பி சென்றுள்ளார். அதனை தொடர்ந்தும் அந்த கும்பல் அப்பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்ததுடன் , வீட்டிற்குள் புகுந்து வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

அதேவேளை காரில் தப்பி சென்ற நபர் சாவகச்சேரி காவற்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததை தொடர்ந்து காவற்துறையினர் விசாரணைக்காக குறித்த நபருடன் அவரது காரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதன் போது அங்கிருந்த கும்பல், மீண்டும் கார் அவ்விடத்திற்கு வருவதை கண்ணுற்று காரின் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்குடன் வந்து காரினை மறித்த போது காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்குவதனை கண்ணுற்று , அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடினர்.

இருந்த போதிலும் தப்பியோடிய கும்பலை துரத்தி சென்ற காவற்துறையினர் இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காவற்துறையினர் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts