சங்கக்கார, மஹேல, மெத்தியூஸ், திமுத்து ஆகியோர் நாட்டு மக்களிடம் கேடடுக்கொண்டுள்ளது என்ன ?

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது.

இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள், மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து, குறுகிய நேரக்காணொளிகளையும் எழுத்துமூலப் பதிவுகளையும் தமது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

அவ்வாறு பிரபல கிரிக்கெட் வீரர்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் வருமாறு:

குமார் சங்கக்கார

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவையாளர்களும், அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார சேவையாளர்கள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்டோர் தமது நலனைப் புறந்தள்ளி நாட்டின் நலனுக்காகச் செயற்படுகையில்இ அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டிய பொறுப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் இருக்கிறது.

முதலாவதாக அவர்களின் அறிவுறுத்தல்களை மிகச்சரியாகப் பின்பற்ற வேண்டும். மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் எமது வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாம் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் ஊடாக இதிலிருந்து விரைவாக மீளமுடியும்.

மஹேல ஜயவர்தன

வைரஸ் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு நான் அவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்றவனல்ல. ஆனால் நாட்டுமக்கள் என்ற வகையில் எம்மால் இச்சவாலுக்கு மேலும் சிறப்பாக முகங்கொடுக்க முடியும். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் அனைவரும் கடைகளுக்குக் கூட்டமாகச் சென்று பொருட்களை வாங்குவதனூடாக, இந்த வைரஸ் மிக இலகுவாகப் பரவக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே அதனைத் தவிர்த்துஇ எவ்வாறு ஓர் ஒழுங்கைப் பேணமுடியும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். வைரஸ் தொற்றுப் பரவலுக்கு இன, மத, ஜாதி பேதங்கள் எவையுமில்லை. எனவே முறையற்ற கருத்துக்களைப் பகிர்வோர் அதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இலங்கையர் என்ற வகையில் நாமனைவரும் மேலும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

அஞ்சலோ மெத்தியூஸ்

நாட்டையும். ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மிகமோசமாகத் தாக்கிவரும் தற்போதைய சூழ்நிலையில் நாமனைவரும் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும். எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்காகப் போராடிவரும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸார், முப்படையினர் அனைவருக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

எனவே அவர்களின் அறிவுறுத்தல்களின்படி செயற்படுவோம். எமது நன்மைக்காக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை மீறாமல், அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுவோம்.

திமுத் கருணாரத்ன

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம்இ நாட்டின் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருந்தும் இது ஏன் வேகமாகப் பரவுகிறது. ஏனெனில் நாம் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, அறிவுறுத்தல்களையோ சரியாகப் பின்பற்றுவதில்லை. எனவே கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருத்தல், அதிகளவானோர் ஒன்றுகூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இவ்வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

Related Posts