Ad Widget

சகல துறைகளிலும் சொதப்பும் டோணி தலை தப்புமா?

இந்திய கேப்டன் பதவியில் இருந்து டோணி நீக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

dhonis

அடுத்தடுத்த தொடர் தோல்விகள் மட்டுமின்றி, அணியின் வீரராகவும் சிறப்பான பங்களிப்பை அளிக்க டோணி தவறி வருவதால் டோணி மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது.

3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.முதலில் நடைபெற்ற டி20 போட்டித்தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. அடுத்தடுத்து முதல் இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரி்க்கா வென்ற நிலையில், கொல்கத்தாவில் நடைபெற இருந்த, மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில்தான், நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரின் முதல் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றுள்ளது. தொடர்ச்சியான இந்த ஹாட்ரிக் தோல்விகள், அணியின் கேப்டன் டோணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

டி20 போட்டிகள் மற்றும், ஒருநாள் போட்டியில், டோணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாரா என்ற கேள்வியை தாண்டி, அவர் அணியின் ஒரு சக வீரராக சிறப்பாக விளையாடினாரா என்ற கேள்வி, கிரிக்கெட் விமர்சகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முந்தி நிற்கிறது.

முதலாவது டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால், அதை இன்னும் அதிக ரன்களாக மாற்றும் கட்டத்தில் களமிறங்கிய டோணி அதை செய்ய தவறிவிட்டார். டோணி களத்தில் நின்றபோதும், கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 41 ரன்கள்தான் கிடைத்தன.

பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா மைதானத்தில்கூட டோணியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. 12 பந்துகளில் டோணி 20 ரன்கள் எடுத்தாலும், முதலில் பல பந்துகளில் ரன்கள் கிடைக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. 199 ரன்கள் எடுத்த இந்தியாவை தென் ஆப்பிரிக்கா எளிதில் வென்றது. தென் ஆப்பிரிக்காவை அந்த ரன்களை எடுக்கச் செய்யாமல் தடுக்கும் வியூகம் டோணியிடம் இல்லை.

2வது டி20 போட்டி, இன்னும் மகா மோசம். இந்தியா 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ஷாக் கொடுத்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில் களமிறங்கிய டோணி, 5 ரன்களை மட்டுமே எடுத்து மோர்க்கல் பந்தில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்த போட்டியிலும் இந்தியா தோற்றது. 17.1 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து வென்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், 303 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு, 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் நின்ற டோணி, பந்து வீச்சாளர் ரபடாவிடமிடமே கேட்ச் கொடுத்து வெளியேறியது ரசிகர்களை அதிரச்சிக்குள்ளாக்கியது. 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த டோணி, கடைசி ஓவரில் 11 ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு வீக்காகிப்போனதை நேற்றைய ஆட்டம் காட்டியது.

கேப்டனாகவும், சக வீரர் என்ற முறையிலும், டோணியின் செயல்பாடு கேள்விக்குள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர் அஜித் அகர்க்கர் வெளிப்படையாக இக்கருத்தை கூறிவிட்டார். “அகர்க்கர் கருத்து, ஆழம் பார்க்கும் ஒரு முயற்சி. டோணிக்கு ஆதரவு குரல் வருகிறதா என்பதை பிசிசிஐ கவனிக்கிறது” என்று கூறுகிறார் கிரிக்கெட் விமர்சகர் ஒருவர்.

பொதுவெளியில் டோணிக்கு எதிரான கருத்தை உருவாக்கிவிட்டு அவரை கழற்றிவிடுவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. டோணியின் ஆதரவாளர் சீனிவாசன் தற்போது பிசிசிஐ பொறுப்பில் இல்லை என்பதை சாதகமாக்கிக்கொண்டு டோணியை கழற்றிவிட, பிசிசிஐக்குள் சிலர் லாபி செய்வதாக கூறப்படுறது.

இந்த ஒருநாள் தொடரை டோணி வெல்லாவிட்டால் அவர் அதற்கடுத்த தொடர்களில், கட்டாயவிடுப்பில் அனுப்பப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. டி20 உலக கோப்பையை, கோஹ்லி தலைமையில்தான் இந்திய அணி எதிர்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. டோணியின் தலைமீது கத்தி தொங்கவிடப்பட்டுள்ளது நிச்சயம்.

Related Posts