கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம டபிள்யூ எம் என் ஏ .புஸ்பகுமார இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது தனிப்பட்ட முகவர்களுக்கும் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்ற பரீட்சை அனுமதி அட்டைகளை எந்த காரணம் கொண்டும் அதிபர் தனது பொறுப்பில் வைத்திருக்க கூடாதென்றும் அவற்றை தாமதியாது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தினத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னரும் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத தனியார் பரீட்சார்த்திகள் அது தொடர்பாக அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் பிரதி ஒன்றையும் பரீட்சைக்கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை அல்லது பரீட்சைக்கட்டணம் செலுத்தப்பட்டது என்ற தபால் அதிபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்ட கடிதம் ஒன்றையும் விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபாலில் சேர்த்ததற்கான பற்றுச்சீட்டையும் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் கிளையிடம் சமர்ப்பித்து பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சை அனுமதி அட்டையில் பாடம் தொடர்பிலான திருத்தம் மொழி தொடர்பிலான திருத்தம் அல்லது வேறு எந்த திருத்தத்தையும் மேற்கொள்ளவேண்டுமாயின் பாடசாலை பரீட்சார்த்திகள் தமது அதிபர் மூலம் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.