பெங்களூரு அணி வீரர் வாட்சன் ‘கிட்டார்’ வாசிக்க, கேப்டன் கோஹ்லி, கெய்ல் இணைந்து குத்தாட்டம் போட்டனர்.
இந்தியாவில் நடக்கும் ஒன்பதாவது பிரிமியர் தொடரில் பங்கேற்கிறது கோஹ்லியின் பெங்களூரு அணி. இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி பெற்றது. கடைசி 3 போட்டிகளில் நட்சத்திர வீரர் கெய்ல் பங்கேற்கவில்லை.
தற்போது அப்பா ஆன சந்தோஷத்தில் அணிக்கு திரும்பியுள்ளார். நாளை ஐதராபாத் அணியை சந்திக்கவுள்ள நிலையில், அணி வீரர்கள் ‘ஜாலியாக’ பொழுது போக்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாட்சன் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து ‘கிட்டார்’ வாசிக்க, டிவிலியர்ஸ் மனைவி டேனியலி, பாட்டுப் பாடினார். இவர்களது பாடல், தாளத்துக்கு ஏற்ப கேப்டன் கோஹ்லி, கெய்ல் இணைந்து குத்தாட்டம் போட்டனர். இடையில் சிறிது நேரம் கோஹ்லி ஓய்வு எடுத்த போதும், கெய்ல் தனது நடனத்தை நிறுத்தவில்லை.
பின் கோஹ்லி மீண்டும் வந்து சேர்ந்து கொள்ள, உற்சாக நடனம் தொடர்ந்தது. அடுத்து ‘மைக்’ பிடித்த கெய்ல், ‘வீ ஆர் சாம்பியன்’ என்ற பாடலைப் பாட, அங்கிருந்த அனைவரும் ஆடத் துவங்கினர்.