இந்திய அணி கேப்டனுக்கு கிடைக்கும் வருமானத்தில் 60 சதவீதம் அளவுக்கு தலைமை பயிற்சியாளருக்கும் வழங்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே பரிந்துரை கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் கோஹ்லியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தை அடுத்து, அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வாரியத்துக்கு ஐபிஎல் பைனல் நடைபெற்றற காலகட்டத்தில் அவர் அனுப்பியுள்ள 19 பக்க பரிந்துரை கடிதத்திலுள்ள அம்சங்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் நிர்வாக கமிட்டி (COA) முன்பு அனில்கும்ப்ளே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரசன்டேசன் வடிவிலான அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
இந்திய அணியிலுள்ள சப்போர்ட்டிங் பணியாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அணியின் கேப்டனுக்கு கிடைக்கும் ஊதியத்தில் 60 சதவீதமாவது பயிற்சியாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
ஐபிஎல் தொடரில் பிசிசிஐ நிர்வாகத்திற்கு கிடைக்கும் வருமானத்திலும் தேசிய பயிற்சியாளர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும். துணை பயிற்சியாளர்கள் சஞ்சய் பங்கர், ஆர்.ஸ்ரீதரின் ஊதியத்தையும் முறையே ரூ.1 கோடியில் இருந்து ரூ.2.25 கோடியாகவும், ரூ.1.75 கோடியாகவும் உயர்த்த வேண்டும் என்றும் கும்ப்ளே பரிந்துரைத்தாராம்.
கும்ப்ளே தாக்கல் செய்த அறிக்கை தங்களிடம் இருப்பதாக, இதுகுறித்த தகவல்களை பி.டி.ஐ செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ளது. எனினும், பிசிசிஐ தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை.
அனில்கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் நடுவேயான ஈகோ போர்தான் இப்பிரச்சினைகளுக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், சம்பள பிரச்சினையும் ஒரு காரணமாகியிருப்பது அம்பலமாகியுள்ளது.