கோவிட் -19 நோய்ப் பரவலுக்கு ஏதுநிலை ஏற்படுத்தினர் -யாழில் ஐவரிடம் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக திண்மக் கழிவுகளை பொது இடத்தில் வீசியதால் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சுகாதாரத் துறையினரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 5 குடியிருப்பாளர்கள் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

தம் மீதான குற்றச்சாட்டை 5 குடியிருப்பாளர்களும் ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்கள் ஐவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

Related Posts