கோலி, மணிஷ் பாண்டே அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்
நேற்று நடைபெற்றது. பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்தனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டனர்.

டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்லா தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்கா, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். 3-வது வீரராக முனவீரா களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவரில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் குவித்தது.

இதனால் 4-வது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் முனவீரா. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் டிக்வெல்லா ஸ்டம்பை பறிகொடுத்தார். டிக்வெல்லா 14 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் பும்ரா 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

3-வது விக்கெட்டுக்கு முனவீரா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இலங்கை மூன்று பவுண்டரிகள் அடித்தது. இதனால் பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் 60 ரன்கள் சேர்த்தது. 7-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் மேத்யூஸை அபாரமாக ஸ்டம்பிங் செய்து வெளியே அனுப்பினார் டோனி. 9-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் முனவீரா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார்.

11-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து அரைசதம் அடித்தார் முனவீரா. தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்தில் க்ளீன் போல்டானார். முனவீரா 29 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்தார். முனவீரா அவுட்டாகும்போது இலங்கை 11.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் ரன் விகிதம் சரிய ஆரம்பித்தது. சாஹல் வீசிய 14-வது ஓவரில் பெரேரா (11), ஷனகா (0) ஆட்டம் இழந்தனர். 17-வது ஓவரில் பிரசன்னா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை 18-வது ஓவரில் 8 ரன்னும், 19-வது ஓவரில் 13 ரன்னும், கடைசி ஓவரில் 13 ரன்களும் எடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பிரயஞ்சன் 40 பந்தில் 41 ரன்கள் எடுத்தும், உதானா 10 பந்தில் 19 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களில் அதிரடியாக மூன்று பவுண்டரிகளை இந்த ஜோடி அடித்தது. 2.4 வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய விராட் கோலி ராகுலுடன் இணைந்து ரன்ரேட் குறையாத வண்ணம் அடித்து ஆடினர். 18 பந்துகளில் 24 ரன்களை எடுத்த லோகேஷ் பிரசன்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய மணிஷ் பாண்டேவும், கோலியும் இலங்கை பந்துவீச்சை ஒருவழி செய்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகியது. சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்ட இந்த ஜோடியால் வெற்றி இலக்கு எளிதாக மாறியது.

10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்த போது விராட் கோலி 82 ரன்களில் கேட்ச் ஆனார். இதன்பின் தோனி களமிறங்கினார். இறுதி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மணீஷ் பாண்டே பவுண்டரி அடித்து தனது அரை சதத்தையும் பூர்த்தி செய்து அதே வேளையில் வெற்றி இலக்கையையும் எட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கையுடனான 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 1 டி-20 போட்டி என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

Related Posts