கோரோனா வைரஸ் அச்சத்தால் இலங்கையில் இருவர் உயிர்மாய்ப்பு!!

கோவிட் – 19 நோய் காரணமாக அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இரண்டு பேர் உயிரை மாய்த்துள்ளனர் என்று பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகலவத்தை மற்றும் ஜா-எலவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியாகப் பணிபுரிந்த 56 வயது நபர் நேற்று அகலவத்தையில் தூக்குப்போட்டு உயிரைமாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பயணித்த பேருந்தை செலுத்திச் சென்றதைத் தொடர்ந்து அவர் கோவிட் – 19 நோய் தனக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி விசாரணையில் தெரிவித்தார்.

ஜா – எலவில் வசிக்கும் 72 வயதான பெண் ஒருவரும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தனது இல்லத்தில் தூக்குப்போட்டு உயிரைமாய்த்துள்ளார்.

வயோதிபப் பெண்ணின் மகள் மற்றும் மருமகன் கோரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அதனால் அவர் கவலை நிலையில் இருப்பதாகவும், சுய தனிமைப்படுத்தலுக்காக வீட்டில் தனியாக இருந்ததால் பதற்றமடைந்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Posts