கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், கடந்த வாரம் அடையாளப்பட்டிருந்தார்.
அதனையடுத்து அவர், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பல்கலைக்கழகத்தின் ஆண்டு இறுதிப்பரீட்சை அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
அந்த மாணவியின் சக மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதே நேரத்தில், சிகிச்சை நிலையத்தில் குறித்த மாணவியும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கலைப் பீடாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மாணவியின் பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் சிகிச்சை நிலையத்தினுள் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் கோவிட் – 19 சிகிச்சை நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.