கோப்பாய் பொலிஸாரின் செயற்பாட்டை விசாரணை செய்யக்கோரி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று முன்தினம் யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் நிகழும் சம்பவங்களின் வழக்கு விசாரணை அறிக்கைகள் திருப்தி இல்லை எனவும் அத்துடன் அங்கு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என மக்கள் தனக்கு முறைப்பாடு தெரிவித்ததற்கமைய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் வயோதிபப் பெண் ஒருவர் பெருங்காயத்திற்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணை மோதிவிட்டு சென்றவரை கைது செய்த போதிலும் நீதிமன்றில் ஆஜர்படுத் தப்படாமல் விடுவித்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் திடீர் மரணவிசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அச் சம்பவம் தொடர்பாக அறிக்கைகளும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
அதே நேரம் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தான் சம்பவம் நடைபெறும் போது விடுமுறையில் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என தெரிவித்ததை அடுத்து நீதிபதி அவர்களின் செயற்பாடுகளை விசாரணை செய்யுமாறு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.