கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையங்கள் தனித்தனியே இயங்கி வருகின்றன.

தனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரின் நிர்வாகத்தின் கீழும் கோவிட்-19 சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழும் இயங்குகின்றன.

அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவுக் கடமைக்கு என கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மதுபோதையில் நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்த இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர். அதனால் இராணுவச் சிப்பாய்கள் பொலிஸாரைத் தாக்கியதால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பணிப்புரையை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வழங்கியுள்ளார்.

Related Posts