கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் உயர்வு

யாழ். மாவட்டத்தில் பிறிமா கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிறிமா கோதுமை மா நேற்றுமுன்தினம் முதல் 85ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் கடைகள் என்பன நேற்று முன்தினம் முதல் கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ளன. பிறிமா நிறுவனம் கோதுமை மா விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனத்தின் வடக்கு மாகாண விநியோக முகாமையாளர் எஸ். கிருபா தெரிவித்தார்.

அத்துடன் பாண் உற்பத்திக்குப் பயன் படுத்தப்படும் பேக்கரி மாவின் விலையும் இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்.நகரப் பகுதியில் உள்ள தனியார் கடைகளிலும், சில கூட்டுறவுச் சங்கங்களிலும் இந்த விலை அதிகரிப்பு உடனடியாகவே மேற்கொள்ளப்பட்டது.

கூட்டுறவுச்சங்கங்களில் சில சங்கங்கள் மூன்று ரூபாவினாலும் வேறு சில சங்கங்கள் 4 ரூபாவினாலும் மாவின் விலையை நேற்று அதிகரித்திருந்தன.

Related Posts